094.நின்ற - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3005 இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே.
6.094.1
பெரிய பூமியாகியும், நீராகியும், தீயாகியும், எறியும் காற்றாகியும், ஆகாயமாகியும், ஞாயிறாகியும், அழிவில்லாத நிலையையுடைய திங்களாகியும், இயமானனாகியும் இங்ஙனம் அட்ட மூர்த்தியாகியும், பெருமையுடையதாகிய நன்மையும், சிறுமை உடையதாகிய குற்றமும், பெண்ணும், ஆணும் ஏனைய தேவருடைய வடிவங்களும் அருவம், உருவம், அருவுருவம் என்னும் தம் மூவகைத் திருமேனிகளும் தாமே ஆகியும், நேற்று ஆகியும், இன்று ஆகியும், நாளை ஆகியும் நீண்ட செஞ்சடையுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
3006 மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.
6.094.2
மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.
3007 கல்லாகிக் களறாகிக் கானு மாகிக்
காவிரியாய்க் கால்ஆறாய்க் கழியு மாகிப்
புல்லாகிப் புதலாகிப் பூடு மாகிப்
புரமாகிப் புரமூன்றுங் கெடுத்தா னாகிச்
சொல்லாகிச் சொல்லுக்கோர் பொருளு மாகிச்
சுலாவாகிச் சுலாவுக்கோர் சூழ லாகி
நெல்லாகி நிலனாகி நீரு மாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.094.3
மலையாகியும் களர்நிலமாகியும் காடாகியும், ஆறாகியும், வாய்க்காலாகிய வழியாகியும், கடற்கரைக்கழியாகியும், புல்லாகியும், புதராகியும், பூடு ஆகியும், நகர் ஆகியும், புரம் மூன்றிற்கும் அழிவாகியும் சொல்லாகியும், சொல்லிற்குப் பொருந்திய பொருள் ஆகியும், போக்கு வரவு ஆகியும், அப்போக்குவரவுக்கு வேண்டிய இடம் ஆகியும் நிலனாகியும், நீராகியும், நெல்லாகியும், நெடிய ஒளிப் பிழம்பாகியும் எம்பெருமான் நெடுகப்பரவி நின்றவாறு வியக்கத் தக்கதாகும்.
3008 காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.4
காற்றாகியும், கரியமுகிலாகியும், இறப்பு நிகழ்வு எதிர்வெனக் காலம் மூன்றாகியும், கனவாகியும், நனவாகியும், இரவாகியும், நாளின் மற்றொரு கூறாகிய பகலாகியும் அல்லது இயமனால் வரும் சாவு ஆகியும், இயமனை உதைத்துக் கொன்ற களிறாகியும், ஒலிக்கும் கடலாகியும், அக்கடற்குத் தலைவனாம் வருணன் ஆகியும், நீறணிந்த கோலத்தன் ஆகியும், நீறணிதற்கு ஏற்ற வடிவத்தன் ஆகியும், நீண்ட ஆகாயம் ஆகியும், அவ்வாகாயத்து உச்சியாகியும், உலகத்தின் தொழிற்பாடுகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டவனாகியும், இடபத்தை ஊரும் தலைவனாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
3009 தீயாகி நீராகித் திண்மை யாகித்
திசையாகி அத்திசைக் கோர்தெய்வ மாகித்
தாயாகித் தந்தையாய்ச் சார்வு மாகித்
தாரகையும் ஞாயிறுந்தண் மதியு மாகிக்
காயாகிப் பழமாகிப் பழத்தில் நின்ற
இரதங்கள் நுகர்வானுந் தானே யாகி
நீயாகி நானாகி நேர்மை யாகி
நெடுஞ்சுடராய் நிமிர்ந்தடிகள் நின்ற வாறே.
6.094.5
தீயின் வெம்மையாகியும், நீரின் தண்மையாகியும், நிலத்தின் திண்மையாகியும், திசைகள் ஆகியும், அத்திசைகள் ஒவ்வொன்றிற்கும் உரிய தெய்வமாகியும், தாயாகியும், தந்தையாகியும், சார்தற்குரிய பற்றுக்கோடாகியும், நாண் மீனாகியும், ஞாயிறாகியும், குளிர் மதியமாகியும், காயாகியும், பழங்கள் ஆகியும், பழத்தில் நின்ற சுவைகள் ஆகியும், அச்சுவைகளை நுகர்பவன் ஆகியும் தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்று இடங்கள் ஆகியும் நுண்மை ஆகியும் நீண்ட ஒளிப்பிழம்பாகியும் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.
3010 அங்கமா யாதியாய் வேத மாகி
அருமறையோ டைம்பூதந் தானே யாகிப்
பங்கமாய்ப் பலசொல்லுந் தானே யாகிப்
பால்மதியோ டாதியாய்ப் பான்மை யாகிக்
கங்கையாய்க் காவிரியாய்க் கன்னி யாகிக்
கடலாகி மலையாகிக் கழியு மாகி
எங்குமாய் ஏறூர்ந்த செல்வ னாகி
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.6
ஆறு அங்கங்கள் ஆகியும், ஆதியாய வேதங்கள் ஆகியும், அரிய மந்திரங்கள் ஆகியும், ஐம்பூதங்களின் தலைவராய தேவர்கள் ஆகியும், புகழ்ச் சொற்களேயன்றி இகழ்ச் சொற்களும் ஆகியும், வெள்ளிய மதி ஆகியும், உலகிற்கு முதல் ஆகியும், வினையாகியும், கங்கை, காவிரி, கன்னி போன்ற தீர்த்தங்களுக்குரிய தேவர்கள் ஆகியும், கடலாகியும், மலையாகியும், கழி ஆகியும், எங்கும் நிறைபொருளாகியும் ஏறூர்ந்த தலைவன் ஆகியும், தோன்றி விளங்கும் ஒளியாகியும் எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
3011 மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கௌதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
6.094.7
மாதாபிதா மக்கள் ஆகியும், அலை எழுந்து மடங்கும் கடலும் பெரிய ஆகாயமும் ஆகியும், கோதாவிரி குமரிகள் ஆகியும், கொல்லும் புலியினது தோலை ஆடையாகக் கொண்ட அழகன் ஆகியும், உரிய பொழுதில் மலர்வதாகிய பூக்கொண்டு புனைந்து புகழ்ந்து நிற்பாருடைய பிறப்பறுக்கும் புனிதன் ஆகியும். ‘யாது நிகழினும் நிகழ்க’ எனக் கவலையற்றுத் தன்னையே நினைவார்க்கு எளிய பொருள் ஆகியும் நெருப்பின் நிறம் போலும் நிறமுடைய எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
3012 ஆவாகி ஆவினில் ஐந்து மாகி
அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி
நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப்
புக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாதி தேவர் முதலு மாகிச்
செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.094.8
பசுவும் பசுவிடத்துத் தோன்றும் ஐம்பொருளும் ஆகியும் வேள்விக்குரியன அறியும் அறிவும், வேள்வித்தீயும், அத்தீயுட்பெய்யும் உணவும் ஆகியும், நாவும் நாவுக்கு ஏற்ற உரையும் ஆகியும், நாதமும் வேதத்தின் பொருளும் ஆகியும், பூவும், அப்பூவிற்குரிய ஒப்பற்ற நாற்றமும் ஆகியும், நாற்றம் பூவிற்குள் ஒன்றாய் நிற்கும் ஒற்றுமை நிலையாகியும், தேவர்களும் தேவர்களின் தலைமைத் தேவரும் ஆகியும், செழுஞ்சுடராய் எம்பெருமான் பரவி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.
3013 நீராகி நீளகலந் தானே யாகி
நிழலாகி நீள்விசும்பி னுச்சி யாகிப்
பேராகிப் பேருக்கோர் பெருமை யாகிப்
பெருமதில்கள் மூன்றினையு மெய்தா னாகி
ஆரேனுந் தன்னடைந்தோர் தம்மை யெல்லாம்
ஆட்கொள்ள வல்லவெம் மீச னார்தாம்
பாராகிப் பண்ணாகிப் பாட லாகிப்
பரஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.
6.094.9
பெரிய மதில்கள் மூன்றையும் எய்தானும், தன்னையடைந்தார் யாராயினும் அவரெல்லாரையும் ஆட்கொள்ளவல்லானும் ஆகிய எம் ஈசன் ஆம் அடிகள் நீரின் சுவையும், நீள அகலங்களும் ஆகியும், புகழும் புகழுக்குப் பொருந்திய ஒப்பற்ற பெருமையும் ஆகியும், பூமியின் பொறைக்குணமும், பண்ணின் இனிமைப் பண்பும், அப்பண்புடைய பாடலும் ஆகியும், மேலான ஒளியாகியும் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாம்.
3014 மாலாகி நான்முகனாய் மாபூ தமாய்
மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வு மாகிப்
பாலாகி யெண்டிசைக்கும் எல்லை யாகிப்
பரப்பாகிப் பரலோகந் தானே யாகிப்
பூலோக புவலோக சுவலோ கமாய்ப்
பூதங்க ளாய்ப்புராணன் தானே யாகி
ஏலா தனவெல்லாம் ஏல்விப் பானாய்
எழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
6.094.10
மாலும், நான்முகனும் ஆகியும், பெரும்பூதங்கள் ஆகியும், பெருக்கமும், சுருக்கமும், மகிழ்ச்சியும், ஆகியும், எட்டுத்திசைக் கூறும் அவ்வெட்டுத் திசைகளுக்கும் உரிய எல்லையும் ஆகியும், பரப்பும் பரலோகமும் ஆகியும், பூலோக புவலோக சுவலோகங்களும், அவற்றின் உட்பட்ட அண்டங்களும் ஆகியும், புராணனுக்குரிய பழமையாகியும், தான் இன்றித் தாமாக நடைபெறாத சட உலகங்களும், அவைகளை நடைபெறுவித்தற்கு அமைந்தவனும் ஆகியும், எழும் ஒளிப்பிழம்பாகியும், எம்பெருமான் விளங்கி நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.
திருச்சிற்றம்பலம்
6.095.தனி - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3015 அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.
6.095.1
ஏறூர்ந்த செல்வனே! எனக்கு அப்பனும் அம்மையும் தமையனும் நீ. அன்புடைய மாமனும் மாமியும் நீ. பிறப்பு, குடிமை முதலியவற்றான் ஒப்புடைய மனைவியரும், ஒள்ளிய செல்வமும் நீ, ஒரு குலத்தவரும், பிற சுற்றத்தவரும், நிலையாக நின்று வாழும் ஒப்பற்ற ஊரும் நீ, நுகர்ச்சிப் பொருள்களாகவும், ஊர்தி வகைகளாகவும் தோன்றுபவனும் நீ, இப்பொன்னும் இம்மணியும் இம்முத்தும் நீ, எனக்குத் துணையாய் உடனின்று உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்னைத் துறப்பிப்பானும் நீ. நீயே எனக்குக் கடவுள்.
3016 வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்
வெய்ய வினைப்பகையும் பைய நையும்
எம்பரிவுந் தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்
எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்
அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி
அனலாடி ஆன்அஞ்சும் ஆட்டு கந்த
செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்
செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.
6.095.2
அழகிய பவளம் போன்ற செஞ்சடைமேல் ஆறு சூடியவரும், அனல் ஆடியவரு ஆன் அஞ்சிலும் ஆடுதலை உகந்தவரும், செம்பவள நிறத்தினரும் செங்குன்ற வடிவினரும், செவ்வான வண்ணரும் ஆகிய சிவபெருமான் எம் சிந்தையராயினார்; அதனால் கூற்றம் நம்மேல் நாம் வருந்தும்படி வரவல்லதன்று. கொடிய வினையாகிய பகையும் மெல்ல வருத்துகின்ற எம் துன்பமும் யாம் தீர்ந்தோம்; யாதோரிடையூறும் இல்லோம்; ஞாயிறு எங்கெழுந்தாலும் அதனால் எமக்கு வரக்கடவது என்னை? யாவர்க்கும் எளியோம் அல்லோம்.
3017 ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
6.095.3
கண்ணுதலாய்! நீ ஆட்டுவித்தால் ஆடாதார் ஒருவர் ஆர்? அடக்குவித்தால் அடங்காதார் ஒருவர் ஆர்? ஓட்டுவித்தால் ஓடாதார் ஒருவர் ஆர்? உருகுவித்தால் உருகாதார் ஒருவர் யார்? பாட்டுவித்தால் பாடாதார் ஒருவர் யார்? பணிவித்தால் பணியாதார் ஒருவர் ஆர்? காட்டுவித்தால் காணாதார் ஒருவர் ஆர்? நீ காட்டாவிடில் காண்பார் ஆர்?
3018 நற்பத்தார் நற்பதமே ஞான மூர்த்தீ
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூழலாய் இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்
நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.
6.095.4
வீடுபேற்றினை அடைய உரியவருடைய வீடுபேறாய் நின்றவனே! ஞானமே வடிவானவனே! நன்மையை விளக்கும் சுடரே! நான்கு வேதங்களுக்கும் அப்பால் நின்ற சொல்பதத்தாராகிய அபர முத்தருடைய சொற்பதத்தையும் கடந்து நின்ற சொல்லற்கரிய சூழலாய்! இஃது உனது தன்மை. நிற்பது போலக் காட்டி நில்லாது அலைகின்ற நெஞ்சுவழியாக வந்து நிலையில்லாத புலாலுடம்பிற்புகுந்து நின்று எல்லாப் பயன்களையும் தரும் கற்பகமே! கனகமும் மாணிக்கமும் ஒத்த நிறத்தினை உடைய எம் கடவுளே. யான் உன்னை விடுவேன் அல்லேன்.
3019 திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணீ றணியாத திருவி லூரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினோடு பலதளிக ளில்லா வூரும்
விருப்போடு வெண்சங்கம் ஊதா வூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர்பறித்திட்டுண்ணா வூரும்
அவை யெல்லாம் ஊரல்ல அடவி காடே.
6.095.5
சிவபெருமானது திருக்கோயிலில்லாததால் நன்மையில்லாத ஊரும், திருவெண்ணீற்றை மக்கள் அணியாததால் நன்மையில்லாத ஊரும், உடம்பு வணங்கிப்பத்தி மிகுதியால் மக்கள் பாடா ஊரும், அழகான பலதளிகள் இல்லாத ஊரும், விருப்புடன் வெள்ளிய வலம்புரிச் சங்கினை ஊதாஊரும். மேற்கட்டியும் வெண் கொடிகளும் இல்லா ஊரும், மலரைப்பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்துச் சிவனுக்குச் சாத்திப் பின்னரே உண்ணல் முறையாயிருக்க அங்ஙனம் உண்ணா ஊரும், ஆகிய அவை எல்லாம் ஊரல்ல; அடவியாகிய பெருங்காடே.
3020 திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
6.095.6
திருநாமமாகிய அஞ்செழுத்தை ஒருகாலும் செப்பாராயின், தீவண்ணருடைய இயல்பை ஒருகாலும் பேசாராயின், திருக்கோயிலினை ஒருகாலம் வலம் வாராராயின், உண்பதற்குமுன் பல மலரைப் பேரரும்பாய் உள்ள நிலையிற் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாராயின், கொடுநோய்கள் கெட வெண்ணீற்றை அணியாராயின், அங்ஙனம் செய்யாதாரெல்லாரும் இறைவனது திருவருளை இழந்தவராவர். அவர்கள் பிறந்த முறைமை தான் யாதோவெனின், தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செத்து, வரும் பிறப்பிலும் பயனின்றி வாளா இறந்து மீளவும் பிறப்பதற்கு அதுவே தொழிலாகி இறக்கின்றார் ஆதலேதான்.
3021 நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்
மன்னனாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்
மறைநான்கு மானாய்ஆ றங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னி னல்லால்
ஏழையேன் என்சொல்லி யேத்து கேனே.
6.095.7
நின்னைப்போல் ஆவார் பிறர் இன்றி நீ ஒருவனே ஆனாய், நினைப்பார்தம் மனமாகிய நிலத்துக்கு ஒப்பற்ற வித்தும் ஆனாய், தலைவன் ஆனாய், அரசர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனாய்; மறை நான்கும் ஆறங்கமுமாய், பொன்னும் மணியும் போகமும் ஆகும் பூமிமேல் புகழ்தற்குரிய பொருளானவனே! நீ எவ்வாறெல்லாம் ஆனாய் எவ்வாறெல்லாம் ஆனாய் என்று வியப்பதையன்றிச் சிற்றறிவினையுடைய யான் எவற்றை எஞ்சாதுசொல்லிப் புகழ்வேன்.
3022 அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
எனையாண்டு கொண்டிரங்கியேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
6.095.8
தந்தையே! ஐயா! உன் அடியவன் ஆகிய என்னை என் அன்பு கொண்டு பிணிப்புண்ணச் செய்தாய்; உனது திருவருள் நோக்கத்தாலே என்னைத் தீர்த்த நீர் ஆட்டித் தூயவன் ஆக்கினாய். அடைதற்கு மிகவும் அரியையாகிய நீ எனக்கு மிகவும் எளியை ஆயினாய்; என்மீது இரங்கி எனை ஆண்டுகொண்டு என்செயல்களை எல்லாம் உன் செயல்களாக முன்னின்று ஏற்றுக்கொண்டாய். ஒரு நெறிப்படாத பித்தனேனும் யாதுமுணராத பேதையேனேனும், வீணில் உழலும் பேயேனேனும் இழிவு மிகுந்த நாயேனேனும் நான் செய்த குற்றங்கள் எல்லாவற்றையும் பொறுத்தனை. நின் அருட்செயல்கள் யாவும் எம்போலியரது அளவிற்கு உரியனவோ? அல்ல; அல்ல; எம்பெருமான் திருக்கருணை இருந்த தன்மையைக் காட்டுவனவே அவை.
3023 குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
எனசெய்வான் தோன்றினேன் ஏழையேனே.
6.095.9
சார்ந்த கூட்டத்தால்நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்;குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிதுஉடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன்.எல்லாவற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடுகூடிப்பழகிற்றிலேன்; மறவுணர்வுடைய மக்கட்கும் அஃதில்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மனவுணர்வு பெற்றும்அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய்குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். பிறப்பால்குடிமை நல்லேன் ஆயினும் என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈயமாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.
3024 சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே.
6.095.10
சங்கநிதி பதுமநிதி ஆகிய நிதிகள் இரண்டையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியொடு வானுலகையும், தருவாராயினும் சிவபெருமானிடத்தே ஒரு தலையாய அன்பில்லாராய் நிலையின்றி அழிவாராகிய அவரது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறையுந் தொழுநோயராய்ப் பசுவை உரித்துத்தின்று திரியும் புலையராயினும் கங்கையை நீண்ட சடையில் கரந்த சிவபெருமானுக்கு அன்பராயின் அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
6.096.தனி - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3025 ஆமயந்தீர்த் தடியேனை யாளாக் கொண்டார்
அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரமரிந்து கையிற் கொண்டார்
தலையதனிற் பலிகொண்டார் நிறைவாம் தன்மை
வாமனனார் மாகாயத் துதிரங் கொண்டார்
மானிடங்கொண் டார்வலங்கைமழுவாள் கொண்டார்
காமனையும் உடல்கொண்டார் கண்ணால் நோக்கிக்
கண்ணப்பர் பணியுங்கொள் கபாலி யாரே.
6.096.1
கண்ணப்பரது பூசையினையும் அன்புகருதி ஏற்றுக்கொண்ட காபாலியாராகிய சிவபெருமானார் நோய் தீர்த்து அடியேனை ஆளாகக் கொண்டவரும், அதிகை வீரட்டானத்திருந்து ஆட்சி செய்பவரும், பிரமனது சிரத்தைக் கொய்து கையிற் கொண்ட வரும், அத்தலையோட்டில் பிச்சை ஏற்றவரும், வாமனனாகி வந்து மண் இரந்து திரிவிக்கிரமனாய் வளர்ந்து மூவுலகையும் அளந்து மிக்க செருக்குற்ற நிலையில் அப்பேருடம்பின் உதிரத்தை வெளிப்படுத்தி அவனை அழித்தவரும், மான்போன்ற உமையை இடப்பாகமாகக் கொண்டவரும், மழு ஆயுதத்தை வலக்கையில் ஏந்தியவரும், நெற்றிக் கண்ணைத் திறந்து பார்த்துக் காமனை அழித்தவரும் ஆவார்.
3026 முப்புரிநூல் வரைமார்பின் முயங்கக் கொண்டார்
முதுகேழல் முளைமருப்புங் கொண்டார் பூணாச்
செப்புருவ முலைமலையாள் பாகங் கொண்டார்
செம்மேனி வெண்ணீறு திகழக் கொண்டார்
துப்புரவார் சுரிசங்கின் தோடு கொண்டார்
சுடர்முடிசூழ்ந் தடியமரர் தொழவுங் கொண்டார்
அப்பலிகொண் டாயிழையார் அன்புங் கொண்டார்
அடியேனை ஆளுடைய அடிக ளாரே.
6.096.2
அடியேனைத் தமக்கு ஆளாகவுடைய தலைவர் ஆகிய சிவபெருமானார் உத்தமவிலக்கணமாகிய கீற்றுப் பொருந்திய மார்பினிடத்து முப்புரிநூல் பொருந்தக் கொண்டவரும். பழைய பன்றியில் முளை போன்ற கொம்பினைப் பூணாகக் கொண்டவரும், கிண்ணம் போன்ற அழகிய முலைகளையுடைய பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவரும் சிவந்த உடலில் வெண்ணீறு விளங்கக் கொண்டவரும், தூய்மை நிறைந்து முறுக்குண்ட சங்கினாலியன்ற தோட்டினைக் கொண்டவரும், அமரர் சூழ்ந்து சுடர் முடியால் தமது அடியைத் தொழக் கொண்டவரும், அந்நாளில் தாருகாவன முனி பத்தினியர் இட்ட பிச்சையோடு அவர்களது அன்பினையும் கொண்டவர் ஆவார்.
3027 முடிகொண்டார் முளையிளவெண் டிங்க ளோடு
மூசுமிள நாகமுட னாகக் கொண்டார்
அடிகொண்டார் சிலம்பலம்பு கழலு மார்ப்ப
அடங்காத முயலகனை அடிக்கீழ்க் கொண்டார்
வடிகொண்டார்ந் திலங்குமழு வலங்கைக் கொண்டார்
மாலையிடப் பாகத்தே மருவக் கொண்டார்
துடிகொண்டார் கங்காளந் தோள்மேற் கொண்டார்
சூலைதீர்த் தடியேனை யாட்கொண் டாரே.
6.096.3
சடையை முடியாகக் கொண்டவரும், முதலில் காணப்படுகின்ற வெள்ளிய பிறைச் சந்திரனையும் படத்தால் மறைக்கும் இளம்பாம்பையும் உடன் உறையும்படி அம்முடிக்கண் கொண்ட வரும், ஒலிக்கும் தன்மை வாய்ந்த சிலம்பினையும் கழலினையும் ஒலிக்கும்படி அடிக்கண் கொண்டவரும், கொடுமை குறையாத முயலகனை அடிக்கீழ்க் கொண்டவரும், கூர்மையைக் கொண்டு நிரம்ப இலங்குகின்ற மழுவினை வலக்கையிற் கொண்டவரும், திருமாலை இடப்பாகமாகப் பொருந்தக் கொண்டவரும், துடியைக் கையிற் கொண்டவரும், எலும்புக் கூட்டினைத் தோள் மேற் கொண்டவரும் ஆகிய சிவபெருமானாரே சூலை நோயைத் தீர்த்து அடியேனை ஆட் கொண்டவர் ஆவார்.
3028 பொக்கணமும் புலித்தோலும் புயத்திற் கொண்டார்
பூதப் படைகள்புடை சூழக் கொண்டார்
அக்கினொடு படஅரவம் அரைமேற் கொண்டார்
அனைத்துலகும் படைத்தவையும் அடங்கக் கொண்டார்
கொக்கிறகுங் கூவிளமுங் கொண்டை கொண்டார்
கொடியானை யடலாழிக் கிரையாக் கொண்டார்
செக்கர்நிறத் திருமேனி திகழக் கொண்டார்
செடியேனை யாட்கொண்ட சிவனார் தாமே. 6.096.4
திருநீற்றுப் பையினையும் புலித்தோலையும் புயத்தில் கொண்டவரும், பூதப்படைகள் தம்மைப் பக்கங்களில் சூடிக் கொண்டவரும், அக்குமணியையும் படநாகத்தையும் இடுப்பின்மேல் கொண்டவரும், தாம் படைத்தவையாகிய எல்லா உலகங்களையும் ஒடுங்குமாறு செய்தலைக் கொண்டவரும், கொக்கிறகினையும் வில்வத்தினையும் முடித்த சடையில் கொண்டவரும், கொடிய சலந்தராசுரனை ஆற்றல் மிக்க ஆழிக்கு இரையாகக் கொண்டவரும், செந்நிறத் திருமேனி விளங்கக் கொண்டவரும் ஆகிய சிவனாரே கீழ்மையேனை ஆட்கொண்டவர்ஆவார்.
3029 அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்
அருமறையைத் தேர்க்குதிரை யாக்கிக் கொண்டார்
சுந்தரனைத் துணைக்கவரி வீசக் கொண்டார்
சுடுகாடு நடமாடு மிடமாக் கொண்டார்
மந்தரம்நற் பொருசிலையா வளைத்துக்கொண்டார்
மாகாளன் வாசல்காப் பாகக் கொண்டார்
தந்திரமந் திரத்தரா யருளிக் கொண்டார்
சமண்தீர்த்தென் றன்னையாட் கொண்டார் தாமே.
6.096.5
அந்தகாசுரனைக் கூரிய சூலத்தால் அழுத்தி அவன் உயிரைக் கொண்டவரும், திரிபுரம் அழிக்கச் சென்ற காலத்தில் உணர்தற்கரிய வேதத்தைத் தேர்க்குதிரையாக்கிக் கொண்டவரும், ஆலால சுந்தரனை இரட்டைக் கவரி வீசக்கொண்டவரும், சுடுகாட்டை நடனமாடுமிடமாகக் கொண்டவரும், மந்தர மலையைப் போரிடுதற்குரிய வில்லாக வளைத்துக் கொண்டவரும், மாகாளனை வாசல் காப்பாளனாகக் கொண்டவரும், தந்திர மந்திரங்களில் பொருந்தி நின்று அருளுதலைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் சமணரிடமிருந்து என்னை நீக்கி என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
3030 பாரிடங்கள் பலகருவி பயிலக் கொண்டார்
பவள நிறங்கொண்டார் பளிங்குங் கொண்டார்
நீரடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார்
நீலநிறங் கோலநிறை மிடற்றிற் கொண்டார்
வாரடங்கு வனமுலையார் மைய லாகி
வந்திட்ட பலி கொண்டார் வளையுங் கொண்டார்
ஊரடங்க வொற்றிநகர் பற்றிக் கொண் டார்
உடலுறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.096.6
பூதகணங்கள் பல இசைக் கருவிகளையும் இயக்கக் கொண்டவரும், மேனியில் பவளநிறத்தையும் வெண்ணீற்றுப் பூச்சில் பளிங்கு நிறத்தையும் கொண்டவரும், கங்கை தங்கும் சடைமுடிமேல் பிறைச் சந்திரனையும் கொண்டவரும், அழகு நிறைந்த மிடற்றினில் நீலநிறம் கொண்டவரும், கச்சிற்குள் அடங்கும் அழகிய முலையாராகிய தாருகாவன முனிபத்தினியர் காதலால் மயக்கம் கொண்டு வந்திட்ட பிச்சையுடன் அவர்களுடைய கைவளையல்களையும் கொண்டவரும் எல்லா ஊர்களும் தம் ஆட்சியில் அடங்கியிருக்கத் திருஒற்றியூரைத் தமக்கு இடமாகப் பற்றிக் கொண்டவருமாகிய சிவபெருமானார் என் உடலிற் பொருந்திய சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
3031 அணிதில்லை அம்பலமா டரங்காக் கொண்டார்
ஆலால வருநஞ்சம் அமுதாக் கொண்டார்
கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்
காதலார் கோடிகலந் திருக்கை கொண்டார்
மணிபணத்த அரவந்தோள் வளையாக் கொண்டார்
மால்விடைமேல் நெடுவீதி போதக் கொண்டார்
துணிபுலித்தோ லினையாடை யுடையாக் கொண்டார்
சூலங்கைக் கொண்டார்தொண்டெனைக்கொண் டாரே.
6.096.7
அழகிய தில்லை அம்பலத்தைத் தாம் ஆடும் அரங்காகக் கொண்டவரும், கடலில் வந்த ஆலால நஞ்சினை அமுதாகக் கொண்டவரும், அழகு மிகுகின்ற சரங்களாகிய பொன் போன்ற கொன்றை மலராலாகிய மணம் கமழ்கின்ற மாலையைக் கொண்டவரும், விருப்பம் நிறைந்த கோடி என்றதலத்தில் கூடி இருத்தலைக் கொண்டவரும், மாணிக்கத்தோடு கூடிய படத்தையுடைய பாம்பினைத் தோள்வளையாகக் கொண்டவரும், மேற் கொண்டு நீண்ட வீதியில் வருதற்குப் பெரிய இடபத்தைக் கொண்டவரும், உரித்த புலியினது தோலை உத்தரியமாகவும் உடையாகவும் கொண்டவரும், சூலத்தைக் கையில் கொண்டவருமாகிய சிவபெருமானார் என்னைத் தமக்கு அடிமையாகக் கொண்டவராவார்.
3032 படமூக்கப் பாம்பணையா னோடு வானோன்
பங்கயனென் றங்கவரைப் படைத்துக் கொண்டார்
குடமூக்கிற் கீழ்க்கோட்டங் கோயில் கொண்டார்
கூற்றுதைத்தோர் வேதியனை உய்யக் கொண்டார்
நெடுமூக்கிற் கரியினுரி மூடிக் கொண்டார்
நினையாத பாவிகளை நீங்கக் கொண்டார்
இடமாக்கி யிடைமருதுங் கொண்டார் பண்டே
யென்னைஇந்நாள் ஆட்கொண்டஇறைவர் தாமே.
6.096.8
படத்தையும் கொடுமைக் குணத்தையுமுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலையும் இந்திரனையும் பங்கயத்துப் பிரமனையும் தம் விருப்பப்படி படைத்துக் கொண்ட வரும், குடமூக்கிற் கீழ்க் கோட்டத்தைக் கோயிலாகக் கொண்டவரும், கூற்றுவனை உதைத்து ஒப்பற்ற வேதியனாம் மார்க்கண்டேயனை வாழக் கொண்டவரும், துதிக்கையை உடைய யானையினது தோலினை உடலில் போர்த்திக்கொண்டவரும், தம்மை நினையாத பாவிகளை நீங்கக் கொண்டவரும், இடைமருதினைத் தமக்கு இடமாகக் கொண்டவரும், ஆகிய சிவபெருமானார் என்னை இந்நாள் ஆட்கொண்ட இறைவர் ஆவார்.
3033 எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்
மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார்
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த
உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்
அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே.
6.096.9
வேள்வித் தெய்வத்தின் நிணம் பொருந்திய தலையைக் கொண்டவரும், சூரியர்களில் ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும், சூரியர்களில் மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும், தன்னையே மெச்சினவனாய், மாறான, வழியல்லாத வழியிற் சென்ற தக்கன் தலையை வேறாகக் கொண்டவரும், வெற்றியுடைய அக்கினி தேவனின் கரத்தைக் கொண்டவரும், வேள்வியைக் காத்து நின்ற வெற்றியில் உயர்ந்த இயமனுடைய தாளை அறுத்தவரும், சந்திரனை உதைத்தவரும், அறிவில்லாத தக்கனுடைய வேள்வி முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப்பின் அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் அடியேனை ஆட்கொண்ட அமலர் ஆவார்.
3034 சடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்
சாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்
உடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்
உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்
கடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்
காபால வேடங் கருதிக் கொண்டார்
விடைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்
வெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.096.10
தன் சடைகள் பலவற்றுள் ஒன்றிடத்தே கங்கையை அடக்கித் தரித்துக் கொண்டவரும், வீணையைத் தடவிச் சாம வேதத்தின் இசையைக் கொண்டவரும், புள்ளி மான் தோலை உடை என்னும் ஒரு தன்மையில் ஏற்றுக்கொண்டவரும், தம்மை நினைவார் உள்ளத்தைத் தம்மிடத்து ஒருங்கிநிற்கும்படி செய்து கொண்டவரும், வீட்டு வாசல் தோறும் பிச்சை கொண்டவரும், கையில் கனல் கொண்டவரும், காபால வேடத்தை விரும்பிக் கொண்டவரும், இடபத்தைத் தன் வெற்றிக் கொடியில் பொருந்தக் கொண்டவரும், ஆகிய சிவபெருமானார் என் கொடிய துயரங்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
3035 குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்
குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்
சிராமலைதஞ் சேர்விடமாத் திருந்தக் கொண்டார்
தென்றல்நெடுந் தேரோனைப் பொன்றக் கொண்டார்
பராபரனென் பதுதமது பேராக் கொண்டார்
பருப்பதங் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணனென் றவனைப்பேர் இயம்பக் கொண்டார்
இடருறுநோய் தீர்த்தென்னை யாட்கொண் டாரே.
6.096.11
குரா மலர் பாம்பு, பிறை இவற்றைச் சடைமேல் கொண்டவரும், நந்தீசனைக் குடமுழா வாசிப்பவனாகக் கொண்டவரும், சிராமலையைத் தாம் சேர்வதற்குத் திருந்த அமைந்த இடமாகக் கொண்டவரும், தென்றலைத் தனது நெடிய தேராகக் கொண்ட மன்மதன் அழியச் சினத்தைக் கொண்டவரும், பராபரன் என்பதுதம் பெயராக அமையக் கொண்டவரும், மேருமலையை வில்லாகக் கையில் கொண்டவரும், பயங்கள் பலவற்றை உண்டாக்கி இராவணன் என்று பேர் இயம்ப அவனைக் கொண்டவரும் ஆகிய சிவபெருமானார் என் துன்பந்தரும் நோய்களைத் தீர்த்து என்னை ஆட்கொண்டவர் ஆவார்.
திருச்சிற்றம்பலம்
6.097.திருவினாத் - திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3036 அண்டங் கடந்த சுவடு முண்டோ
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ
கண்ணின்மேற் கண்ணொன் றுடைய துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.097.1
அன்பர்களே! நீங்கள் கண்ட எம்பிரானிடம் அண்டம் கடந்து நின்றதற்கான அடையாளம் உண்டோ? அங்கையில் அனலேந்திய ஆடலுண்டோ? பண்டை முனிவர் எழுவர் பணி செய்யும் படியும் உண்டோ? பூதங்கள் பல சூழப் போதல் உண்டோ? கண்டம் சிறிதே கறுத்தது உண்டோ? கண்களுக்கு மேலாக நெற்றியில் கண் ஒன்று உண்டோ? தொண்டர் சூழும் அத்தொடர்ச்சி உண்டோ? நீங்கள் அவனைக் கண்டவண்ணம் எமக்குச் சொல்வீராக.
3037 எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
யிலங்கிழையோர் பாலுண்டோவெள்ளே றுண்டோ
விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ
வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ
அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
சொரிகின்ற புனலுண்டோ சூலம் உண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.097.2
அன்பர்களே! நீங்கள் கண்ட எம்பிரானிடம் இள ஞாயிறு போன்று ஒளிவிடும் அவன் உடலின் ஓருபால் விளங்குகின்ற அணியினை உடைய உமாதேவி உண்டோ? வெள்ளிய இடப முண்டோ? பரவுகின்ற தீப்பொறியும் ஒலியுமுடைய தழலுமுண்டோ? வேழத்தின் தோல் உண்டோ? வெண்ணூல் உண்டோ? வரியும் புள்ளியும் பொருந்திய பாம்பைக் கொண்ட சடையுமுண்டோ? அச்சடை மேல் வைக்கப்பட்ட இளமதியும் உண்டோ? சடையிலிருந்து ஒழுகும் நீர் உண்டோ? கையில் சூலும் உண்டோ? நீங்கள் அவனைக் கண்ட வண்ணம் எமக்குச் சொல்வீராக.
3038 நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ
நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
பூதந்தற் சூழ்ந்தனவோ போரே றுண்டோ
கலாமாலை வேற்கண்ணாள் பாகத் துண்டோ
கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.097.3
அன்பர்களே! நீவிர் கண்ட எம்பெருமான் பிறைக் கண்ணியைச் செஞ்சடை மேல்வைத்ததுண்டோ? அவனுக்கு நெற்றியில் கண்ணுண்டோ? பூசும் நீறுதான் அவனுக்குச் சந்தனமோ? புலால் நாறும் வெள்ளெலும்புமாலையை அவன் பூண்டதுண்டோ? பூதங்கள் அவனைச் சூழ்ந்ததுண்டோ? போர்க்குணமுடைய இடபம் அருகில் உண்டோ? போர் செய்யும் தன்மை வாய்ந்தனவும், வேல்போன்றனவுமாகிய கண்களையுடைய உமையம்மை அவன் பாகமாகப் பொருந்திய துண்டோ? கார்காலத்து மலரும் கொன்றை மாலை அவனுடலில் கலந்ததுண்டோ? வளைந்தமாலை போல்வதும் படமெடுத்தாடுவதும் ஆகிய பாம்பு தோள்மேல் விளங்குதல் உண்டோ? அவனை நீங்கள் கண்டவண்ணம் எமக்குக் கூறுவீராக.
3039 பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
கண்ணார் கழல்காலற் செற்ற துண்டோ
காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.097.4
அன்பர்காள்! நீவிர் கண்ட எம்பெருமான் பண் நிறைந்த வீணையை வாசித்துப் பழகியதுண்டோ? பூதங்கள் பல சூழ்ந்து வர வெளியே போந்ததுண்டோ? உண்ணற்காகாத கொடிய நஞ்சை உண்டதுண்டோ? ஊழித் தீப் போன்ற ஒளி அவன்பால் உண்டோ? கண், மகிழ்வால் நிறைதற்குக் காரணமான திருவடியால் அவன் காலனை உதைத்ததுண்டோ? மன்மதனையும் நெற்றிக்கண்ணிடத்துத் தோன்றிய நெருப்பால் அவன் அழித்ததுண்டோ? பகைவருடைய திரிபுரங்கள் மேல் அவன் அம்பு எய்ததுண்டோ? நீங்கள் அவனை எவ்வகையில் கண்டீர்கள்?
3040 நீறுடைய திருமேனி பாக முண்டோ
நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
கொல்புலித்தோ லுடையுண்டோகொண்ட வேடம்
ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
அதனருகே பிறையுண்டோ அளவி லாத
ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
6.097.5
அன்பர்காள்! நீவிர் கண்ட எம்பெருமானுக்குத் திருமேனியில் நீறு பூசிய பாகமுண்டோ? நெற்றியில் நெருப்புமிகும் ஒரு கண்ணுமுண்டோ? கூறுபடுத்துங்கொடிய மழுவாயுதம் கையிலுண்டோ? கொல்லும் புலியது தோலாகிய உடையுண்டோ? கங்கையைத் தாங்கும் சடையுண்டோ? அச்சடையிடத்துப் பாம்பு உண்டோ? அப் பாம்பின் அருகே பிறையுண்டோ? பெருமை அளவிட முடியாத இடபக் கொடியுண்டோ? கூத்துமுண்டோ? நீங்கள் அவன் கொண்ட எவ்வகை வேடத்தில் அவனைக் கண்டீர்கள்?.
3041 பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன்
பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
கட்டங்கக் கொடிதிண்டோள் ஆடக் கண்டேன்
கனமழுவாள் வலங்கையில் இலங்கக் கண்டேன்
சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.
6.097.6
அன்பர்காள்! சிவபெருமானை நான் கனவில் கண்டவாறே நனவிலும் அவன் நெற்றிப்பட்டமும் செவித்தோடும் ஓரொருபாகத்தில் விளங்கக் கண்டேன், நிலம் அழகுபெறுமாறு பிச்சை பெறப்பல இடங்களிலும் திரிந்தலையக் கண்டேன். வாச்சியங்களைப் பூதகணங்கள் இயம்பப் பலவகைக் கூத்துக்களை ஆடக் கண்டேன். காதிற்குழையும் சென்னியில் பிறையும் விளங்கக் கண்டேன், உயர்த்திய மழுக்கொடி திண்டோளை ஒட்டி ஆடக்கண்டேன்; வலிமை மிக்க மழுவாயுதம் வலக்கையில் திகழக் கண்டேன்; மேலான அவனைத் திருவாலவாயிற் கண்டேன். அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம்?.
3042 அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன்
அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்
கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
வலித்துடுத்த மான்தோல் அரையிற் கண்டேன்
மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.
6.097.7
மறைவல்லவனும், மாதவத்தவனும் ஆகிய சிவபெருமானுடைய சடையில் அலைவீசி ஓடும் நீர்ப் பெருக்கையுடைய கங்கையைக் கண்டேன். கொன்றை மலரால் ஆன மாலையை அவன் அணிந்த தன்மையைக் கண்டேன். பிச்சைக்கு ஓடித்திரியும் அவன் கையில் பாம்பைக் கண்டேன். பகற்பொழுதில் பழனத்திருப்பதியில் அவன் சென்றுபு குதலைக் கண்டேன். அவன் ஆரவாரம் மிக்க கச்சி மேற்றளியில் மேவி இருக்கக் கண்டேன். அவனது கறைபொருந்திய மிடற்றைக் கண்டேன்; கையில் கனலும் கண்டேன். அரையில் இறுக்கி உடுத்த மான் தோலைக் கண்டேன். அவனை நான் கண்டவாறு இது. அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம்?
3043 நீறேறு திருமேனி நிகழக் கண்டேன்
நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
ஆறேறு சென்னியணி மதியுங் கண்டேன்
அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
ஏறேறி யிந்நெறியே போதக் கண்டேன்
இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.
6.097.8
அன்பர்காள்! எம்பெருமான் திருநீறு திகழும் திருமேனியுடன் உலவக் கண்டேன். அவன் நீண்ட சடைமேல் நீர்நிறை கங்கை பொருந்தக் கண்டேன். கூறுபடுத்தலைப் பொருந்திய கொடிய மழுவாயுதத்தை அவன் கொள்ளக் கண்டேன். கொடுகொட்டி என்னும் வாச்சியத்தையும் கையலகு என்னும் ஆயுதத்தையும் அவன் கையிற் கண்டேன். ஆறு பொருந்திய அவன் தலையில் அழகிய மதியையும் கண்டேன். அவன் அடியார்க்கு ஆரமுதம் போன்று இன்பஞ் செய்தலைக் கண்டேன். அவன் இடபவாகனமேறி இவ்வழியே வரக்கண்டேன். அவனை இவ்வகையில் யான் கண்டேன். அவனை நீவிர் கண்டவாறு எங்ஙனம்?.
3044 விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு
வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
அரையுண்ட கோவண ஆடை யுண்டு
வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
இரையுண் டறியாத பாம்பு முண்டு
இமையோர் பெருமா னிலாத தென்னே.
6.097.9
அன்பர்காள்! இமையோர் பெருமானுடலில் மணமுடைய வெண்ணீறு உண்டு. அவன் கைகளில் ஒன்றில் வெண்டலையும் ஒன்றில் வீணையுமுண்டு. சுரைபோன்று தோன்றும் சடை முடியுண்டு அவனுக்கு, அதில் அவன் சூடும் பிறை ஒன்றுண்டு. அவன் சூலாயுதத்தையும் தண்டாயுதத்தையும் சுமந்ததுண்டு, அவனுக்கு இடுப்பில் கட்டிய கோவண ஆடையுண்டு, அவன்பால் ஊன்றுகோலும் போர்க்குந்தோலும் அழகாக உண்டு. அவனிடத்து இருக்கும் பாம்பு பசி இல்லாததாகலின் இரையுண்டறியாதது. அவனிடம் எல்லாம் உள. இவ்வாறு அவனை நான் கண்டேன். நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம்?
3045 மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.
6.097.10
இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான்” என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன்; ஓரூர்க்கே உரியனல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.
3046 பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன்
புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்
மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்
அன்னத்தே ரூர்ந்த அரக்கன் தன்னை
அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.
6.097.11
அன்பர்காள்! நான் சிவபெருமானை என் சிந்தனையுட் கண்டவாறே என் கண்ணிலும் அவன் பொன்னார் மேனி மேல் திருநீற்றுப் பொடியும் கண்டேன்; புலித்தோலாகிய உடை கண்டேன். தன்னிடப்பாகத்தில் மின்னலைப் போன்ற நுண்ணிய இடையை உடைய உமையாள் பொருந்தக் கண்டேன. ஒளியுடைப் பாம்பு ஒன்றையும் அரைமேற்கண்டேன். அன்னம்போன்ற வெள்ளிய தேரினை ஊர்ந்த அரக்கன் அலற அவனை நசுக்கிய திருவடியையும் கண்டேன். அடையாளப் பூவாகிய கொன்றை மலராலான தலை மாலையையும் கண்டேன். நீவிர் அவனைக் கண்டவாறு எங்ஙனம்?
திருச்சிற்றம்பலம்
6.098.திருமறுமாற்றத்-திருத்தாண்டகம்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
3047 நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம்நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.
6.098.1
நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம்; இயமனை அஞ்சோம்; நரகத்தில் புக்கு இடர்ப்படோம்; பொய்யும் இல்லோம்; என்றும் களிப்புற்றிருப்போம்; பிணியாவது இஃது என அறியோம்; வேறு யாரையும் பணிவோம் அல்லோம்; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை. தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய் அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம் ஆகலின்.
3048 அகலிடமே இடமாக ஊர்கள் தோறும்
அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்
புகலிடமாம் அம்பலங்கள் பூமி தேவி
யுடன்கிடந்தாற் புரட்டாள்பொய் யன்று மெய்யே
இகலுடைய விடையுடையான் ஏன்று கொண்டான்
இனியேதுங் குறைவிலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவா சொல்லும்
சொற்கேட்கக் கடவோமோ துரிசற் றோமே.
6.098.2
பரந்த பூமிமுழுதும் எமக்கு இடமாகும். ஊர்கள் தோறும் தம் உணவை அட்டுண்ணும் இல்லறத்தான் அதனைப் பிறர்க்கு இட்டு அல்லது உண்ணாராதலின் எமக்கு உணவுப் பிச்சையிடுதலை அவர்கள் ஒருபோதும் விலக்கார். அம்பலங்கள் யாம் தங்கும் இடங்களாகும். யாம் தன்னுடன் கிடந்தால் பூமிதேவி எம்மைப் புரட்டி எறியாள். இது பொய்யன்று, மெய்யே. போர்விடையை ஊர்தியாக உடைய சிவபெருமானார் எம்மைத் தம் அடிமையாக ஏற்றுக் கொண்டார். அதனால் இனியாம் ஏதும் குறைவில்லேம்; துன்பமாயின எல்லாம் தீர்ந்தேம். குற்றமற்றேம் ஆயின் யாம் சிறந்த உடைகளை உடுத்துப் பொன்னாபரணங்களைப் பூண்டு திரியும் அரசர் சொல்லும் சொல்லை ஏற்க வேண்டிய கடப்பாடு உடையேம் அல்லேம்.
3049 வாராண்ட கொங்கையர்சேர் மனையிற் சேரோம்
மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீராண்ட புரோதாயம் ஆடப் பெற்றோம்
நீறணியுங் கோலமே நிகழப் பெற்றோம்
காராண்ட மழைபோலக் கண்ணீர் சோரக்
கன்மனமே நன்மனமாய்க் கரையப் பெற்றோம்
பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்
பணிகேட்கக் கடவோமோ பற்றற் றோமே.
6.098.3
கச்சணிந்த கொங்கை மாதருடன் சேர்ந்து வாழும் இல்வாழ்க்கையில் பொருந்தோம். மகாதேவா மகாதேவா என்று பலகாலும் அவனை வாழ்த்தி விடியற்காலத்து நீராடப் பெற்றோம், திருநீறணியும் சைவத் திருக்கோலமே எம்பால் நிலவப் பெற்றோம். பண்டு கல்லாய்த் திகழ்ந்த மனம் கரிய மேகம் பொழியும் மழை போலக் கண்ணீர் சோருமாறு நன்மனமாய்க் கரையப் பெற்றோம். ஆகவே உலகியற் பொருளில் பற்றற்றேமாகிய யாம் பூமி முழுவதையும் ஆண்டு ஆனை ஏறி வரும் அரசர் ஏவும் பணிகளை ஏற்க வேண்டிய கடப்பாட்டினேம் அல்லேம்.
3050 உறவாவார் உருத்திரபல் கணத்தி னோர்கள்
உடுப்பனகோ வணத்தொடுகீ ளுளவா மன்றே
செறுவாருஞ் செறமாட்டார் தீமை தானும்
நன்மையாய்ச் சிறப்பதே பிறப்பிற் செல்லோம்
நறவார்பொன் னிதழிநறுந் தாரோன் சீரார்
நமச்சிவா யச்சொல்ல வல்லோம் நாவால்
சுறவாருங் கொடியானைப் பொடியாக் கண்ட
சுடர்நயனச் சோதியையே தொடர்வுற் றோமே.
6.098.4
சிவவேடத்தையுடைய சிவனடியார்கள் எம் உறவினர் ஆவர். கோவணமும் கீளும் யாம் உடுப்பனவாய் உள்ளன. ஆகவே பகைவரும் எம்மை வெகுளார். தேன் நிறைந்து பொன் போன்று திகழும் நல்ல கொன்றை மாலையணிந்த புகழுடைய சிவபெருமானுடைய நமச்சிவாய மந்திரத்தை நாவால் சொல்ல வல்லேமாய்ச் சுறவுக்கொடியானாகிய மன்மதனைப் பொடியாக அக்கினி நேத்திரத்தை விழித்த சோதிவடிவினனையே தொடர்வுற்றே மாதலின், தீமை, நன்மையாய்ச் சிறக்கப் பிறப்பிற் செல்லேம் ஆயினேம்.
3051 என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.
6.098.5
சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலை விட்டு ஓடிப்போயின.
3052 மூவுருவின் முதலுருவாய் இருநான் கான
மூர்த்தியே யென்றுமுப் பத்து மூவர்
தேவர்களும் மிக்கோருஞ் சிறந்து வாழ்த்தும்
செம்பவளத் திருமேனிச் சிவனே யென்னும்
நாவுடையார் நமையாள வுடையா ரன்றே
நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான
காவலரே யேவி விடுத்தா ரேனுங்
கடவமல்லோம் கடுமையொடு களவற் றோமே.
6.098.6
“அயன், அரி, அரன் என்னும் மூவுருவிற்கும் முதலுருவாயவனே! அட்டமூர்த்தியே! முப்பத்து மூவர் தேவர்களும் அவர்களின் மிக்க இருடியரும் எக்காலத்தும் மகிழ்ச்சி மிக்கு வாழ்த்தும் செம்பவளத் திருமேனியுடைய சிவனே” என்று போற்றும் நாவுடையாரே நம்மை அடிமை கொண்டு ஆள உடையாராவார். அதனால் கடிதாய செயலும் களவும் அற்றோமாகிய யாம் நாவலந் தீவு முழுவதற்கும் தலைவரான அரசரே எம்மை அழைத்து வருமாறு தம் ஏவலரை ஏவி விடுத்தாராயினும் அவர் ஆணை வழி நிற்கும் கடப்பாட்டினேம் அல்லேம்.
3053 நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கௌமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே.
6.098.7
நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும், நெருப்பும், காற்றும், நெடுவானும், புன்மையதும், பெரியதும், அரியதும், அன்புடையார்க்கௌயதும், அளக்கலாகாத் தற்பரமும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவபெருமானை அவன் நன்மைகளையும், பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம்; அதனால் பிழையற்றோம். அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்பப் பேயர் பேசுமாறு போலயாம் பேசுவமோ?
3054 ஈசனையெவ் வுலகினுக்கும் இறைவன் தன்னை
இமையவர்தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனைச் செம்மேனி வெண்ணீற் றானைச்
சிலம்பரையன் பொற்பாவை நலஞ்செய் கின்ற
நேசனை நித்தலும் நினையப் பெற்றோம்
நின்றுண்பார் எம்மை நினையச் சொன்ன
வாசக மெல்லாம் மறந்தோ மன்றே
வந்தீரார் மன்னவனா வான்றா னாரே.
6.098.8
எவ்வுலகினுக்கும் ஈசனும், இறைவனும், தேவர்கள் தலைவனும், எரிபோன்று மிக்கு ஒளிரும் தேசனும், செம்மேனியிடத்து வெண்ணீற்றானும், மலையரையன் பொற்பாவை தன்னைக் காதலிக்க, தானும் அவளைக் காதலிக்கும் நேசனும் ஆகிய சிவபெருமானைத் தினமும் நினையப் பெற்றோம். அதனால் நின்றுண்ணும் சமணர் என்றும் மறவாதிருக்கும்படி எமக்குச் சொன்ன உறுதிபோலும் சொற்களை எல்லாம் யாம் மறந்தொழிந்தோம். இந்நிலையில் என்னிடம் வந்த நீர் யார்? மன்னன் ஆவான் தானும்யாரே?.
3055 சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே.
6.098.9
சடையுடையானும் ஒருகாதில் விளங்கும் சங்கக் குழையானும், சாம்பலைப் பூசிப் பாம்பை அணிந்த மேனியானும், விடையுடையானும், புலித்தோலாம் மேலாடையானும், வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த உடை உடையானும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான். அதனால் பாசத்தை முழுதும் உதறியெறியும் நிலையினை உடையோம். ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களையுமுடைய அரசனுடைய ஆணைகேட்கும் தொழில் உடையோம் அல்லோம்.
3056 நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.
6.098.10
நாவிடத்து இன்பம் நிறையச் சிவபெருமானையே பாடப் பெற்றோம் அதனால் உடை உடாத சமணர் எம்மை விரும்பாது விலகப்பெற்றோம். அமரர் தலைவனாகிய சிவபெருமான் மனமிரங்கி எமை ஆள்வான். நான்முகனும் திருமாலும் அறிதற்கு அரிய அனற் பிழம்பாய் நீண்டவனும் தேவர்க்குத் தேவனுமாகிய சிவபெருமான் எம் சிந்தையில் மன்னி நின்றான். அதனால் அவனுக்குரிய எண் குணங்களை உடையேமாயினேம். ஆகவே இயமனே வந்து தன் தலைமையை உரைத்து எம்மைக் குற்றேவல் செய்க என்றாலும் அதனை எமக்குரிய நெறியாகக் கொள்ளோம்.
திருச்சிற்றம்பலம்
6.099.திருப்புகலூர்
திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அக்கினீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
3057 எண்ணுகேன் என் சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.1
புண்ணியா, அழகிய புகலூர் மேவிய புண்ணியனே, நினையுந்தன்மை உடையேனாகிய நான் எம்பெருமானாகிய நினது திருவடியை விரும்பி நினையின் அல்லது வேறு எதனை விரும்பி நினைவேன்? நினது கழலடியையே கைதொழுது காணின் அல்லது வேறு காட்சியில்லேன்; மற்றொரு பற்றுக்கோடும் இல்லேன். யான் வாழ்வதற்குப் பொருந்திய உறையுளாகிய இவ்வுடம்பிலே ஒன்பது வாசல் வைத்தாய். அவையாவும் ஒரு சேர அடைக்கப்படும் காலத்து மேற்குறித்தவாறு உன்னையே நினைதலையும் காணுதலையும் செய்யமாட்டேன். ஆதலின் அக்காலம் வாராதபடி இப்பொழுதே உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3058 அங்கமே பூண்டாய் அனலா டினாய்
ஆதிரையாய் ஆல்நிழலாய் ஆனே றூர்ந்தாய்
பங்கமொன் றில்லாத படர்சடை யினாய்
பாம்பொடு திங்கள் பகைதீர்த் தாண்டாய்
சங்கையொன் றின்றியே தேவர் வேண்டச்
சமுத்திரத்தின் நஞ்சுண்டு சாவா மூவாச்
சிங்கமே உன்னடிக்கே போது கின்றேன்
திருப்புகலூர் மேவிய தேவ தேவே.
6.099.2
திருப்புகலூர் மேவியதேவ தேவே! எலும்புகளை அணியாகப் பூண்டவனே, அனலாடீ, ஆதிரை நாண்மீனை உடையவனே, கல்லால மர நிழலமர்ந்தோனே. ஆனேற்றை ஊர்ந்தவனே, குறைஒன்றுமில்லாத பரவியசடையினனே, பாம்பொடு திங்களை வைத்து வற்றின் பகை தீர்த்தாண்டவனே, தேவர் வேண்டப் பிறிது எண்ணம் ஒன்று இன்றியே சமுத்திரத்தில் தோன்றியநஞ் சினையுண்டு சாதலும் மூத்தலும் இல்லாத வலிய சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3059 பையரவக் கச்சையாய் பால்வெண் ணீற்றாய்
பளிக்குக் குழையினாய் பண்ணா ரின்சொல்
மைவிரவு கண்ணாளைப் பாகங் கொண்டாய்
மான்மறிகை ஏந்தினாய் வஞ்சக் கள்வர்
ஐவரையும் என்மேல் தரவ றுத்தாய்
அவர்வேண்டும் காரியமிங் காவ தில்லை
பொய்யுரையா துன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.3
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! பட நாகத்தைக் கச்சையாகக் கொண்டவனே, பால்போலும் வெள்ளிய திருநீற்றினாய், பளிக்குக் குழையினனே, பண்போலும் இன் சொல்லும் மை பூசிய கண்ணுமுடைய பார்வதியைப் பாகங்கொண்டவனே, மான் கன்றை ஏந்திய கையினனே, வஞ்சமிக்க கள்வரைப் போன்ற ஐம்புலன்களும் வஞ்சம் செய்தலை என்னினின்றும் நீக்கினை. அவை விரும்பும் காரியம் எனக்கு நன்மை பயக்குமாறு இல்லை. என்னுரை பொய்யுரையன்று: உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக்கொண்டு அருள்வாயாக.
3060 தெருளாதார் மூவெயிலுந் தீயில் வேவச்
சிலைவளைத்துச் செங்கணையாற் செற்ற தேவே
மருளாதார் தம்மனத்தில் வாட்டந் தீர்ப்பாய்
மருந்தாய்ப் பிணிதீர்ப்பாய் வானோர்க் கென்றும்
அருளாகி ஆதியாய் வேத மாகி
அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்துங் காணாப்
பொருளாவாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.4
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தாங்கள் செய்து வந்த சிவ வழிபாட்டினை இடையிலேயே விட்டொழிந்த மயக்கத்தினராகிய திரிபுரத்தசுரரின் மூன்று மதிலும் தீயில் வேகுமாறு வில்லை வளைத்துச் செங்கணையால் அவற்றை அழித்த தேவனே! மயக்கமின்றி நின்னையே வழிபடுவார் மனத்தில் ஏற்படும் மெலிவைத் தீர்ப்பவனே! தேவர்களுக்கு மருந்தாய் என்றும் அவருற்ற பிணி தீர்ப்பவனே! அருளே உருவமாகி எப்பொருட்கும் முதலாகிய வேதமானவனே! பிரமனும் திருமாலும் தேடியும் காணமுடியாத பொருளானவனே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3061 நீரேறு செஞ்சடைமேல் நிலாவெண் டிங்கள்
நீங்காமை வைத்துகந்த நீதி யானே
பாரேறு படுதலையிற் பலிகொள் வானே
பண்டனங்கற் காய்ந்தானே பாவ நாசா
காரேறு முகிலனைய கண்டத் தானே
கருங்கைக் களிற்றுரிவை கதறப் போர்த்த
போரேறே உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.5
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கங்கை தங்கிய செஞ்சடைமேல் நிலவையுடைய வெள்ளிய திங்களை நீங்காமல் உறையும்படி விரும்பிவைத்த நீதியனே! பருமை பொருந்திய படுதலையில் பிச்சை கொள்வானே! பண்டு மன்மதனைச் சுட்டு எரித்தவனே! பாவங்களை நாசம் செய்பவனே! கருமை பொருந்திய மேகம் போன்ற கண்டத்தை உடையவனே! கரியதும் கையுடையதுமாகிய களிறுகதற அதனை உரித்து அதன் தோலைப் போர்த்த போர்த்தொழில் வல்ல சிங்கமே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏற்றுக் கொண்டருள்வாயாக.
3062 விரிசடையாய் வேதியனே வேத கீதா
விரிபொழில்சூழ் வெண்காட்டாய் மீயச் சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவ தேவே
திருவாரூர்த் திருமூலட் டானம் மேயாய்
மருவினியார் மனத்துளாய் மாகா ளத்தாய்
வலஞ்சுழியாய் மாமறைக்காட் டெந்தா யென்றும்
புரிசடையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.6
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! விரி சடையாய்! வேதத்தாற் புகழப்படுவோனே! வேதத்தைப் பாடுபவனே! விரிந்த பொழிலால் சூழப்பட்ட வெண்காட்டினனே! மீயச்சூரை உடையவனே! திரிபுரங்களை எரித்தழித்த தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்தில் விரும்பி உறைவோனே! இனிய பண்பு உடையாரின் மனத்துள்ளவனே! மாகாளத்து வாழ்பவனே! வலஞ்சுழி வள்ளலே! மாமறைக்காட்டெந்தையே! என்றும் முறுக்குண்டு திகழும் சடையானே! உன் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
3063 தேவார்ந்த தேவனைத் தேவ ரெல்லாந்
திருவடிமேல் அலரிட்டுத் தேடி நின்று
நாவார்ந்த மறைபாடி நட்டம் ஆடி
நான்முகனும் இந்திரனும் மாலும் போற்றக்
காவார்ந்த பொழிற்சோலைக் கானப் பேராய்
கழுக்குன்றத் துச்சியாய் கடவு ளேநின்
பூவார்ந்த பொன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.7
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! கடவுட்டன்மை மிக்க கடவுளே, எல்லாத் தேவரும் நான்முகனும், இந்திரனும், மாலும் தேடிக் கண்டு நின்று திருவடிமேல் பூக்களை இட்டு நாவிற்பொருந்திய மறையைப்பாடி நட்டம் ஆடிப் போற்ற இள மரக்காவுடன் பொருந்திய பொழிலாகிய சோலையையுடைய கானப் பேரூர் என்ற திருத்தலத்தில் விளங்குபவனே! கழுக்குன்றின் உச்சியில் உள்ளவனே! மனம் வாக்கு மெய்களைக் கடந்தவனே! நின் பூவைப் போலப் பொருந்திய அழகிய திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்றுகொண்டருள்வாயாக.
3064 நெய்யாடி நின்மலனே நீல கண்டா
நிறைவுடையாய் மறைவல்லாய் நீதி யானே
மையாடு கண்மடவாள் பாகத் தானே
மான்தோல் உடையா மகிழ்ந்து நின்றாய்
கொய்யாடு கூவிளங் கொன்றை மாலை
கொண்டடியேன் நானிட்டுக் கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.8
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! நெய்யாடுபவனே, நின்மலனே, நீல கண்டனே, நிறைவுடையவனே, வேதம் வல்லானே, நீதியனே, மைவிரவு கண் மடவாள் பார்வதி திகழ் பாகத்தானே, மான்தோலை உடையாகக் கொண்டு மகிழ்ந்தவனே, இப்பொழுது பறித்தல் பொருந்திய, வில்வம் கொன்றை இவற்றால் ஆகிய மாலையைக் கொணர்ந்து இட்டு அடியேன் பொய்யில்லாத நின்புகழ்விரிக்கும் தோத்திரங்களைக் கூறி வழிபட்டு நின்று நின் சேவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
3065 துன்னஞ்சேர் கோவணத்தாய் தூய நீற்றாய்
துதைந்திலங்கு வெண்மழுவாள் கையி லேந்தித்
தன்னணையுந் தண்மதியும் பாம்பும் நீருஞ்
சடைமுடிமேல் வைத்துகந்த தன்மை யானே
அன்ன நடைமடவாள் பாகத் தானே
யக்காரம் பூண்டானே ஆதி யானே
பொன்னங் கழலடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.9
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! தைத்தல் பொருந்திய கோவணத்தை உடையவனே! தூய நீற்றினனே! ஒளி மிகுந்து விளங்கும் வெள்ளிய மழுவாயுதத்தைக் கையிற் கொண்டு, தன்னைச் சார்ந்த குளிர்ந்த பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடைமுடிமேல் வைத்து மகிழ்ந்த அருள்தன்மையனே! அன்னநடை மடவாள் பார்வதி திகழும் பாகத்தை உடையவனே! எலும்பு மாலை அணிந்தவனே! முதற்கடவுளே! நான் நின் பொன்னால் ஆகிய கழல் அணிந்த திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டு அருள்வாயாக.
3066 ஒருவனையும் அல்லா துணரா துள்ளம்
உணர்ச்சித் தடுமாற்றத் துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என்மேல் ஏவி
இல்லாத தரவறுத்தாய்க் கில்லேன் ஏலக்
கருவரைசூழ் கானல் இலங்கை வேந்தன்
கடுந்தேர்மீ தோடாமைக் காலாற் செற்ற
பொருவரையாய் உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.
6.099.10
அழகிய புகலூரில் மேவிய புண்ணியனே! ஒருவை ஆகிய நின்னையல்லது என் உள்ளம் வேறு உணராது. உணர்வு கலங்குமாறு புலனாகாது அருவாய் நின்ற இருவினைகளையும் முக்குணங்களையும் என்மேல் விடுத்துப் பொய்யான யான் எனது என்னும் செருக்கினை அறுத்தாய்க்குச் செய்யும் கைம்மாறு இல்லேன். ஏலம் நிறைந்த கரிய மலைகளைச் சூழ்ந்து கடற்கரை விளங்கும் இலங்கைக்கு அரசனது விரைந்து செல்லும் தேர், மேலே ஓடாமல் காலால் ஊன்றிய போர் செய்யும் திருக்கயிலாய மலையானே! நான் நின் திருவடிக்கே வருகின்றேன். என்னை ஏன்று கொண்டருள்வாயாக.
திருச்சிற்றம்பலம்
ஆறாம் திருமுறை முற்றும்.